சப்-கலெக்டர் அலுவலகத்தில் இலவச மனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம் சிதம்பரத்தில் பரபரப்பு
சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் இலவச மனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.;
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே உள்ள கிளியனூர் ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் 89 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா இல்லாமல் வசித்து வந்தனர். இதனால் அவர்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சேகர் தலைமையில் கிளியனூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா வைரமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் புலவழகன், வட்டக் குழு உறுப்பினர்கள் வேல்வேந்தன், அர்ச்சுனன்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர்.
பின்னர் பொதுமக்கள், தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சப்-கலெக்டர் இல்லாததால், நேர்முக உதவியாளர் ராமதாசிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுவை அளித்து விட்டு கலைந்து சென்றனர்.
அந்த மனுவில், நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். எங்கள் கிராமத்தில் இடவசதி இல்லாமல் சாலை புறம்போக்கு, குளத்து புறம்போக்கு உள்ளிட்ட இடங்களில் வசித்து வருகிறோம். அதிலும் ஒரே வீடுகளில் இரண்டு, இரண்டு குடும்பத்தினர்களாக குடியிருக்கிறோம். அதனால் எங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தால் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.