இறந்தவர் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டம்
பொன்னமராவதி அருகே இறந்தவர் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டா இடம்...
பொன்னமராவதி அருகே பி.உசிலம்பட்டி ஏனமேடு பகுதியில் பல ஆண்டுகளாக அனைத்து மக்களும் பயன்படுத்தக்கூடிய பொது சுடுகாடு உள்ளது. அதை தனிநபர் ஆக்கிரமித்து கம்பிவேலி அமைத்துள்ளார். அப்போதே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து சுடுகாட்டை மீட்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் ஏனமேட்டை சேர்ந்த அழகர்சாமி (வயது 65) என்பவர் நேற்று இறந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்ற போது பட்டா இடத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என பொன்னமராவதி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தடுத்துள்ளனர்.
இறந்தவர் உடலை வைத்து போராட்டம்
இதையடுத்து பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ், பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பட்டா இடத்தில் அடக்கம் செய்ய வேண்டாம். வேறு இடம் தருகின்றோம் அந்த இடத்தில் அடக்கம் செய்யுங்கள் என வலியுறுத்தினார்.
ஆனால் அவர்கள் அதனை ஏற்காமல் நடைமுறையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரி இறந்தவரின் உடலை பொன்னமராவதி-பூலாங்குறிச்சி சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர்.
சமாதான கூட்டம்
இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) திருஞானம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டத்தின் வாயிலாக தீர்வு காணலாம் என்று கோட்டாட்சியர் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், போராட்டத்தை கைவிட்டு அதிகாரிகள் கூறிச்சென்ற அரசு இடத்தில் இறந்தவர் உடலை அடக்கம் செய்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.