டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
சூரியமணலில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
டாஸ்மாக் கடை
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் நேற்று மாலை 4 மணி அளவில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. கடைக்கு விற்பனைக்காக முதன் முதலாக 4 மதுபான பெட்டிகள் மட்டுமே வைத்து விற்பனையை நேற்று தொடங்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கடையின் முன்பு ஒன்றுகூடி கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடை தொடங்கப்பட்ட இடத்தின் அருகில் கல்லூரி, ஒழுங்குமுறை விற்பனை கூடம், மின்வாரிய அலுவலகம் உள்ளிட்டவை உள்ளது. இதுபோல் நகரை சுற்றி பள்ளி, கல்லூரிகள் உள்ளன.
போராட்டம்
ஏற்கனவே ஜெயங்கொண்டம் அருகே 5 கிலோ மீட்டர் தொலைவில் கல்லாத்தூர் கிராமத்திலும், வாரியங்காவல்- தேவனூர் செல்வம் சாலையிலும் டாஸ்மாக் கடைகள் உள்ளன. எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது. மேலும் கடையின் உள்ளே இருந்த 4 மது பாட்டில் பெட்டிகளையும் வெளியே எடுத்துச் செல்லக் கூறியும், இங்கு விற்பனை செய்யக்கூடாது எனவும் கூறினர்.
இந்த முற்றுகை போராட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகள் திருமாவளவன், பரசுராமன் உள்பட அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது கடையில் இருந்த தொழிலாளர்கள் உள்ளே இருந்த மதுபான பெட்டிகளை வெளியே கொண்டு வந்து வைத்தனர். கடையை மூடி செல்லக்கூறி பொதுமக்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.