கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

செல்போன் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-05 18:49 GMT

செல்போன் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

நெல்லை பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது மைதீன் கசாலி தலைமையில் அந்த பகுதி மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் அருகே கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

செல்போன் கோபுரம்

பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் அருகில் உள்ள ரகுமத் நகர், ராஜீவ் காந்தி நகர், ஆசிரியர் காலனி, ப.த.நகர் ஆகிய இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு அதிக கதிர் வீச்சு பரப்ப கூடிய செல்போன் கோபுரம் அமைக்க பணிகள் நடந்து வருகிறது. இதனால் பல விதமான நோய்களுக்கு ஆளாவதுடன் குழந்தைகள், பெண்கள், முதியோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறிஉள்ளனர்.

பாரதீய ஜனதா கட்சி துணைத்தலைவர் மாரியப்பன் தலைமையில் அந்த கட்சியினர் கொடுத்த மனுவில், ''தச்சநல்லூர் -சங்கரன்கோவில் ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் கட்டிடத்தின் முன்பகுதியில் பல்வேறு கடைகள் உள்ளன. அந்த கட்டிடத்தின் பின் பகுதி சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி விட்டது.

இதே போல் தச்சநல்லூர் -டவுன் ரோட்டில் மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுடன் கூடிய மிகவும் ஆபத்தான நிலையில் ஒரு கட்டிடம் உள்ளது. எனவே இந்த 2 கட்டிடங்களையும் இடித்து விட்டு பள்ளிக்கூடமாக மாற்ற வேண்டும்.

மேலும், தச்சநல்லூர் மற்றும் சுற்றுப்புற பகுதியான தாராபுரம், கரையிருப்பு, ராமையன்பட்டி பகுதியில் இருந்து 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி, ஆட்டோ கட்டணம் ஏற்படுகிறது. எனவே தச்சநல்லூரில் புதிய பள்ளிக்கூடம் அமைத்து கொடுத்தால் மாணவ-மாணவிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்'' என்று கூறிஉள்ளனர்.

கரையிருப்பு பசும்பொன் நகர் பகுதியை சேர்ந்த சுப்பையா தலைமையில் அந்த பகுதி மக்கள் கொடுத்த மனுவில், ''நாங்கள் 50 ஆண்டுகளாக கரையிருப்பு பகுதியில் 30 வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். எங்களுக்கு வரைமுறை பட்டா உடனடியாக வழங்க வேண்டும்'' என்று கூறிஉள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்