கோவிலில் பணியில் சேர வந்த பூசாரிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

பொன்மனை அருகே கோவிலில் பணியில் சேர வந்த பூசாரிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2022-06-22 20:31 GMT

குலசேகரம், 

பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவிலில் பூசாரியாக இருந்தவர் மீது பொதுமக்கள் பல புகார் கூறினர். இதையடுத்து கோவில் நிர்வாகம் அவரை பொன்மனை அருகே உள்ள மரவூர் கண்டன்சாஸ்தா கோவிலுக்கு பணியிடம் மாற்றம் செய்தது. ஆனால், அங்கு பூசாரி பணியில் சேர அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்த பூசாரி சென்னை ஐகோர்ட்டில் தனக்கு பணியிடம் வழங்கக் கேட்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் நேற்று மாலை 4 மணியளவில் மரவூர் கண்டன் சாஸ்தா கோவிலில் பூஜைகள் நடந்து கொண்டிருந்த நிலையில், கோவில் மேலாளர் (பொறுப்பு) மோகன்குமார் மற்றும் பத்மநாபபுரம் தொகுதி கண்காணிப்பாளர் செந்தில் குமார் ஆகியோர் பூசாரியை பணியில் சேர்க்கும் வகையில் அழைத்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து பொதுமக்கள் அங்கு திரண்டு பூசாரி பணியில் சேர எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த குலசேகரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இரு தரப்பினரையும் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் ஆஜராகி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணும் படி கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்