திருச்செந்தூர் அருகே குப்பை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு; உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை
திருச்செந்தூர் அருகே ராணிமகாராஜபுரம் பகுதியில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர். அவர்களிடம் உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.;
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு வரும் பக்தர்கள் ஆங்காங்கே விட்டு செல்லும் பல்வேறு கழிவுப்பொருட்கள் மற்றும் கோவிலில் இருந்து வரும் கழிவுப்பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி திருச்செந்தூர் அருகே உள்ள ராணிமகாராஜபுரம் கிராம பகுதிகளில் கொட்டப்பட்டு வருகிறது.
அந்த கழிவுகளை தீயிட்டு அழிக்கும்போது, அதன்மூலம் வெளியேறும் புகை சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் பரவுவதால் பொதுமக்கள் பலருக்கு மூச்சுத்திணறல், நுரையீரல் சார்ந்த பல்வேறு நோய்கள் உருவாகி பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராணிமகாராஜபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வந்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், திருச்செந்தூர் கோவிலில் சேரும் குப்பைக்கழிவுகளை தங்கள் ஊர் பகுதிகளில் கொட்டி வருவதை கண்டித்து நாளை (புதன்கிழமை) ராணிமகாராஜபுரம் ஊர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
இதையடுத்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் குருசந்திரன் தலைமையில் தாசில்தார் வாமனன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அதிகாரிகள், ராணிமகாராஜபுரம் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், 3 மாத காலத்தில் குப்பைகளை அகற்றி தருவதாகவும், மேலும் அங்கு குப்பை கொட்டாத வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். இதையெடுத்து நாளை நடைபெற இருந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்து உள்ளனர்.