பாளையங்கோட்டை பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்- துணைமேயர் ராஜூவிடம் பொதுமக்கள் மனு

பாளையங்கோட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை உடனே தீர்க்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் துணைமேயர் ராஜூவிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்

Update: 2022-07-05 21:44 GMT

பாளையங்கோட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை உடனே தீர்க்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் துணைமேயர் ராஜூவிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. துணை மேயர் ராஜூ தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

பாளையங்கோட்டை 32-வது வார்டு பொதுமக்கள் கவுன்சிலர் அனுராதா தலைமையில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அதில,் எங்கள் வார்டு பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அனைத்து அடிபம்புகளும் பழுதாகி காணப்படுகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள ஜோதிபுரம் திடலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும், என குறிப்பிட்டு உள்ளனர்.

கண்காணிப்பு கேமரா

பாளையங்கோட்டை 39-வது வார்டு பொதுமக்கள் கவுன்சிலர் சீதாபாலன் தலைமையில் கொடுத்த மனுவில், 'பாளையங்கோட்டை மண்டலம் 39-வது வார்டு விரிவாக்க பகுதியில் வழிப்பறி, தங்க சங்கிலி பறிப்பு மற்றும் குற்ற செயல்கள் நடப்பதால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தனர்.

பாளையங்கோட்டை தியாகராஜநகர், டி.வி.எஸ்.நகர், தாமிரபரணி காலனி, பி.டி. காலனி ஆகிய பகுதிகளில் தெருநாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க வேண்டும், என்று அந்த பகுதியை சேர்ந்த செல்வகுமார் மனு கொடுத்தார்.

பேட்டை 18-வது வார்டு சீனிவாசநகர் பகுதியில் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்று பேட்டை சீனிவாசன் நகர் நல சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

பேட்டை 18-வது வார்டு பொதுமக்கள் கவுன்சிலர் சுப்பிரமணியன் தலைமையில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், பேட்டை செந்தமிழ்நகரில் குடிநீர் பிரச்சினை உள்ளது. இதை தீர்க்க வேண்டும், என்று கூறியுள்ளனர்.

அடிப்படை வசதிகள்

தமிழ்ப்புலிகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமையில் மனு கொடுத்தனர். அதில் பாளையங்கோட்டை மண்டலம் 36-வது வார்டில் காமராஜர் காலனி, முனிசிபல் காலனி, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை கழிவுநீர் மற்றும் மழைநீர் குளம் தேங்கி கிடக்கிறது. அதை சரி செய்ய வேண்டும். மேலும் அந்த பகுதியில் தடுப்புச்சுவருடன் கூடிய சிறிய பாலங்கள், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், என்று கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்