தேன்கனிக்கோட்டை அருகே கோவில் நிலத்திற்கு பட்டா வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்
தேன்கனிக்கோட்டை அருகே கோவில் நிலத்திற்கு பட்டா வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.;
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே கோவில் நிலத்திற்கு பட்டா வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
கோவில் நிலம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே பசேசுவரர் கோவில் உள்ளது. இந்த பகுதியில் கல்லாவி என்பவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
அந்த இடத்தில் இவரது மகன் முரளி கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கிராம மக்கள் இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோவில் நிலத்திற்கு பட்டா வழங்கியதை கண்டித்து நேற்று பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உதவி கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் குருநாதன், மண்டல துணை தாசில்தார் ஆனந்த், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர் அரவிந்த் ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வலியுறுத்தல்
அப்போது கோவில் நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்த முரளி மற்றும் பட்டா வழங்கிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி கலெக்டர் உறுதிஅளித்தார். இதையடுத்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.