கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்

தென்காசியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புகுந்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-04 15:32 GMT

தென்காசியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புகுந்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ேஷக் அப்துல் காதர், மாவட்ட சமூக நல அலுவலர் முத்துமாரியம்மன், ஜெயராணி மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 'ஒன் ஸ்டாப் சென்டர்' மூலம் பெண்கள் பிரச்சினைகளுக்கான உதவி எண் 181, முதியோர்களுக்கான உதவி எண் 14567 ஆகிய எண்களை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டார். தொடர்ந்து பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

பொதுமக்கள் போராட்டம்

புளியங்குடி இந்து குறவர் சமுதாய கமிட்டி தலைவர் தங்கவேலு தலைமையில் அந்த சமுதாயத்தினர் கோஷங்கள் எழுப்பியபடி கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு இருந்த போலீசார், அவர்களை தடுத்தனர். அந்த தடுப்புகளை மீறி உள்ளே சென்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில், 'புளியங்குடி நகர் பகுதியில் தங்களது பட்டியல் சாதி இந்து குறவர் சான்றிதழை சட்ட விரோதமாக பட்டியல் சாதி அல்லாதவர்களுக்கு அதிகாரிகள் வழங்கி உள்ளனர். எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி அந்த சாதி சான்றை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

டாஸ்மாக் கடை

கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூர் பஞ்சாயத்து துணை தலைவர் சிவகுமார் மற்றும் இளைஞர்கள் தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், தெற்கு மடத்தூர் பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம், பீடி சுற்றுதல் உள்ளது. தெற்கு மடத்தூர் ஊராட்சியில் இருந்து 2.5 கிலோ மீட்டர் தொலைவில் பொட்டல்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி, அதேபோல் ஊரின் வடக்கே வெங்கடாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 2 கிலோமீட்டர் தொலைவிலும் ஏற்கனவே 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் தெற்கு மடத்தூர் கிராமத்தில் புதிதாக 3-வது டாஸ்மாக் கடையை அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த வழியாகத்தான் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் சென்று வருகிறார்கள். இதனால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே தெற்கு மடத்தூர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்க கூடாது, என்று கூறப்பட்டு இருந்தது.


Tags:    

மேலும் செய்திகள்