போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா
திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்;
பழனியை அடுத்த கீரனூர் அருகே வேலாம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்கள் கிராமத்தை சேர்ந்த சிலர் நாய்க்குட்டி ஒன்றை துன்புறுத்தினர்.
அவர்களை தட்டிக்கேட்ட அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை அவர்கள் மானபங்க படுத்த முயன்றதோடு கத்தியால் அந்த பெண்ணின் கையில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து கீரனூர் போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அந்த பெண்ணுக்கு ஆதரவாக நாங்கள் இங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.