வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து, கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
விருத்தாசலம் இந்திராநகர் மற்றும் கடலூர் ரோட்டில் 75 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை இந்த முகவரியிலேயே பெற்றுள்ளனர். விருத்தாசலம் நகராட்சிக்கு வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்தி வருகிறார்கள். மின் கட்டணமும் செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் நீர் நிலை புறம்போக்கில் வசித்து வருவதாக கூறி 75 குடும்பத்தினரையும் வீடுகளை காலி செய்ய தாசில்தார், ஆணையாளர் ஆகியோர் நோட்டீசு வழங்கினர். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததோடு, எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.
பொதுமக்கள் தர்ணா
இந்த நிலையில் அப்பகுதி மக்கள் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் ராஜ்குமார் தலைமையில் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் கண்ணீர் மல்க, எங்கள் வீடுகளை காலி செய்யக்கூடாது. நாங்கள் வசிக்கும் இடம் நீர் நிலை புறம்போக்கு இல்லை. எங்களுக்கு நாங்கள் குடியிருக்கும் இடத்திலேயே பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
பட்டா வழங்க வேண்டும்
இது பற்றி தகவல் அறிந்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளரும், கடலூர் மாநகராட்சி துணை மேயருமான தாமரைச்செல்வன் வந்து, அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் பொதுமக்களுடன் சென்று மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) டெய்சிகுமாரை சந்தித்து மனு அளித்தார். அதில், வீடுகளை காலி செய்ய உரிய காலஅவகாசம் வழங்குவதுடன், நீர் நிலை புறம்போக்கு இல்லாத பகுதியில் வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்ற அவர், கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.