பொதுமக்களின் கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்படும்: கலெக்டர் தங்கவேல் பேட்டி

பொதுமக்களின் கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்படும் என கரூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற தங்கவேல் கூறினார்.;

Update:2023-10-18 22:54 IST

புதிய கலெக்டர் பொறுப்பேற்பு

கரூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். கரூர் மாவட்ட கலெக்டராக தங்கவேல் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து கரூர் மாவட்ட கலெக்டராக தங்கவேல் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து அவருக்கு அரசு அதிகாரிகள், போலீசார், சக ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

பேட்டி

பின்னர் கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2006, 2007, 2008-ம் ஆண்டில் துணை கலெக்டராக பயிற்சி முடித்து விட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்துள்ளேன். தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலராகவும், திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணிபுரிந்து உள்ளேன். பின்னர் சென்னை சுகாதாரத் துறையில் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவை கழகத்தில் பணியாற்றியும், சிப்காட் நிறுவனத்திலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையிலும் பணிபுரிந்து உள்ளேன்.

உடனடி நடவடிக்கை

அதன்பிறகு, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் இணை மேலாண்மை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனராகவும் பணி புரிந்துள்ளேன். திட்டங்களை பொறுத்த வரையில் தமிழ்நாடு அரசு முன்னுரிமை திட்டங்கள், நீர் ஆதாரத்திட்டங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றுவேன். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை வாணிஈஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி, அலுவலக மேலாளர் (பொது) பிரபு, அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்