சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

Update: 2022-12-05 20:40 GMT

சிதம்பரம்:

சிதம்பரம் பள்ளிப்படை, பூதக்கேணி பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று வக்கீல் சண்முகசுந்தரம் தலைமையில் பள்ளிப்படை ஜமாத் தலைவர் ஜாபர் அலி, செயலாளர் அன்வர் அலி, பொருளாளர் சலாவுதீன் ஆகியோருடன் சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், வெங்கடேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக சிதம்பரம் பள்ளிப்படை, பூதக்கேணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். இந்த நிலையில் பள்ளிப்படை, பூதக்கேணி உள்ளிட்ட இடங்கள் அனைத்தும் தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு சொந்தம். எனவே அப்பகுதியில் உள்ள சொத்துகளை விற்கவோ, வாங்கவோ யாரேனும் வந்தால், அதனை பதிவு செய்யக்கூடாது என்று தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் சிதம்பரம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இது தவறானதாகும். மேற்கண்ட இடத்தில் நாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களிடம் இடத்துக்கான பட்டா, பத்திரம் ஆகியவை உள்ளது. எனவே இது எங்கள் இ்டம். அதனால் வக்பு வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையை உடனே வாபஸ் பெற வேண்டும் என கூறினர். இதையடுத்து பொதுமக்கள் சப்-கலெக்டர் சுவேதா சுமனிடம் தங்களது கோரிக்கை குறித்த மனுவை வழங்கினர். அதனை பெற்ற அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்