மயிலாடுதுறை அருகே நீடூரில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை கண்டித்து நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு த.மு.மு.க. பொறுப்பாளர் ரியாசுதீன் தலைமை தாங்கினார். இதில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் காளிதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் உமா காந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நீடூர் துணை மின் நிலையத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அங்கு பணிபுரியும் மின்சார வாரிய அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். நீடூர் பகுதியில் பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உடனே சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்ததும் நீடூர் துணை மின் நிலைய அலுவலர்கள் மற்றும் மயிலாடுதுறை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டக்காரர்களின் கோரிக்கை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக மணல்மேடு சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.