வீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

ஓமலூர் அருகே வீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2022-09-13 22:37 GMT

ஓமலூர்:

சாலைமறியல்

ஓமலூரை அடுத்த பி.நல்லாகவுண்டம்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக இந்த காலனியில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்ல சிரமப்பட்டு வந்தனர். எனவே அவர்கள் மழைநீரை அகற்றக்கோரி ஒன்றிய ஆணையாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவித்தனர். ஆனால் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று சேலம்-முத்துநாயக்கன்பட்டி ரோட்டில் செட்டியார் கடை பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது

பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த ஓமலூர் தாசில்தார் வல்ல முனியப்பன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்ந்து ஆதிதிராவிடர் காலனியில் வீடுகளை சூழ்ந்த மழைநீர் அகற்றப்பட்டது. பொதுமக்களின் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்