ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-22 17:03 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கடைகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து கடலூர் ரோடு இந்திரா நகரில் உள்ள முல்லா ஏரி மற்றும் ஆலடி ரோட்டில் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகளை அகற்ற அதிகாரிகள் சென்றனர்.

ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற அங்கிருந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு ஒரு வார கால அவகாசம் அளித்தனர். அதற்குள் பொதுமக்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை தாங்களே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். இருப்பினும் பொது மக்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

முற்றுகை

இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிந்தனர். இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் அசோகன் தலைமையில் பேரணியாக சென்று சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் சப்-கலெக்டர் பழனி பேச்சுவார்த்தை நடத்தினார். நாங்கள் குடியிருக்கும் வீடுகளை அகற்றக் கூடாது. அவ்வாறு அகற்ற வேண்டும் என்றால் எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். மேலும் பயன்பாடு இன்றி இருக்கிற நீர்நிலை இடங்களை வகை மாற்றம் செய்து பொதுமக்களுக்கு மனை பட்டாவாக வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து மனுவை பெற்று கொண்ட சப்-கலெக்டர் பழனி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்