சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பொது ஏலம் விட நடவடிக்கை; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்..

Update: 2022-12-18 09:42 GMT

அபராதம்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலைகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் விடப்படுகிற கால்நடைகளை பிடித்து மாவட்ட அளவில் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொண்டமங்கலம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பட்டியில் அடைக்கப்படுவதுடன், கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படு்ம் நடைமுறை கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் பிடிக்கப்படும் கால்நடைகளை 24 மணி நேரத்திற்குள் ரூ.2 ஆயிரம் அபராத தொகையாக செலுத்தி உள்ளாட்சி அமைப்புகள் அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் கால்நடை வளர்ப்பவர்களின் வீடு அல்லது கால்நடை பிடிபட்ட எல்லைக்குட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று பிரமாண பத்திரம் சமர்ப்பித்த பின்னரே கால்நடைகளை கால்நடை உரிமையாளர்கள் ஓட்டி செல்லலாம்.

பொது ஏலம்

தவறும் பட்சத்தில், 24 மணி நேரத்திற்கு பின்னரும் உரிமை கோரப்படாத கால்நடைகள், உள்ளாட்சி அமைப்புகள் அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மூலம் பொது ஏலம் விடப்படும்

மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சி அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் போலீஸ் துறையுடன் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் பிடிக்கப்படும்.

எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை அவர்களின் சொந்த இடங்களிலேயே கட்டி வைத்து பராமரிக்கவும், பொது வெளியில் திரிய விடாமல் முறையாக பராமரித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், கால்நடைகளை பொது வெளியில் விடும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்பட்டு, போலீஸ்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு மாடுகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்