பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் 30-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் வருகிற 30-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தார்கள்.

Update: 2022-06-22 22:28 GMT

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் செயற்கைக்கோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகின்றனர். தற்போது எடை குறைந்த செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்காக எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளையும் வடிவமைத்துவருகின்றனர்.

இந்தநிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வருகிற 30-ந் தேதி பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணுக்கு ஏவப்படுகிறது. இது பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 55-வது ராக்கெட்டாகும். 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 16-வது ராக்கெட் ஆகும்.

பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்

இந்த ராக்கெட்டில் டிஎஸ். இஓ. என்று அழைக்கப்படும் 365 கிலோ எடை கொண்ட, சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த எலக்ட்ரோ-ஆப்டிக் செயற்கைக்கோள் என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் அதிக தெளிவுதிறன் மற்றும் ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை பார்க்கும் வசதி கொண்டது. இது கடல்சார் பாதுகாப்பு மற்றும் எண்ணெய் கசிவு கண்டறிதல் போன்ற தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்யும்.

இந்த செயற்கைக்கோளுடன், சிங்கப்பூரின் மற்றொரு செயற்கைக்கோளான 155 கிலோ எடை கொண்ட என்இயு-சாட் மற்றும் கொரியா நாட்டைச் சேர்ந்த 2.8 கிலோ எடையுள்ள ஸ்கூப்-1 உள்பட 3 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன. அத்துடன் புவி சுற்றுப்பாதையுடன் பூமியை நிலையானதாகச் சுற்றும் சோதனைத் தொகுதி ஒன்றும் ராக்கெட்டில் பொருத்தி ஏவப்படுகிறது.

கவுண்ட்டவுன்

பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் வருகிற 29-ந் தேதி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட், பூமியில் இருந்து 570 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் இத்தகவல்களை தெரிவித்தார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்