மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி : காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மல்லிகா, துணைத் தலைவர் கஸ்தூரி பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உழவர் சந்தை அமைக்க வேண்டும், மழைக்காலங்களில் சாலையில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓடையை தூர்வாரி கரையை அகலப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு குறைகள் குறித்து கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் கூறினார். இதைத்தொடர்ந்து தலைவர் சிறப்பு தீர்மானங்கள் குறித்து வாசித்தார். அதில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.