தரமான பச்சை தேயிலையை வழங்க வேண்டும்

கூடலூர் பகுதியில் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. இதனால் தரமான தேயிலையை வழங்க வேண்டும் என விவசாயிகளுக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் அறிவுறுத்தி உள்ளனர்.;

Update:2023-07-15 02:45 IST

கூடலூர்

கூடலூர் பகுதியில் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. இதனால் தரமான தேயிலையை வழங்க வேண்டும் என விவசாயிகளுக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் அறிவுறுத்தி உள்ளனர்.

பச்சை தேயிலை

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் நடப்பாண்டில் பருவமழை இதுவரை போதுமான அளவு பெய்யவில்லை.

காலை முதல் மாலை வரை வெயில் மற்றும் மழை என காலநிலை அடிக்கடி மாறி காணப்படுகிறது. இது பச்சை தேயிலை விளைச்சலுக்கு ஏற்றதாக உள்ளது. ஆனால் குறுமிளகு உள்ளிட்ட பணப்பயிர்களின் விளைச்சல் பாதிக்கும் நிலை உள்ளது. இந்தநிலையில் மிதமான மழையும், வெயிலும் மாறி, மாறி காணப்படுவதால் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தேயிலை தொழிற்சாலைகளுக்கு வரத்து அதிகமாக உள்ளது.

சுழற்சி முறை

இதனால் விவசாயிகளிடம் இருந்து சுழற்சி முறையில் பச்சை தேயிலையை பல தொழிற்சாலை நிர்வாகங்கள் கொள்முதல் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் அறுவடை செய்யப்படும் பச்சை தேயிலையை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகத்திற்கும், விவசாயிகளுக்கும் இடையே சில சமயங்களில் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

இதனால் விளைச்சல் அதிகரித்து உள்ள சூழலில், தரமான பச்சை தேயிலையை மட்டும் விவசாயிகள் வழங்க வேண்டும் என தொழிற்சாலை நிர்வாகங்கள் அறிவுறுத்தி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, தொழிற்சாலைகளில் பச்சை தேயிலை அரவை திறன் குறிப்பிட்ட அளவு மட்டுமே உள்ளது. தற்போது விளைச்சல் அதிகரித்து உள்ளதால் அறுவடை செய்யப்படும் தேயிலையை முழுமையாக கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் தரமான பச்சை தேயிலையை மட்டும் அறுவடை செய்தால் வரும் நாட்களில் நல்ல விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்