வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேவையான தகவல்களை வழங்க வேண்டும்
வீட்டுக்கு கணக்கெடுக்க வரும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேவையான தகவல்களை வழங்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
வீட்டுக்கு கணக்கெடுக்க வரும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேவையான தகவல்களை வழங்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வரைவு வாக்காளர் பட்டியல்
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட பல்வேறு முன்திருத்த நடவடிக்கைகளுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதை முன்னிட்டு முன்திருத்த நடவடிக்கையாக அனைத்து வாக்காளர்கள் விவரங்களை சரிபார்த்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்து, தொடர் நடவடிக்கையாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், வாக்குசாவடிகள் பிரித்தல், இடமாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியினை மேற்கொள்ள உள்ளனர்.
பெயர் சேர்க்க ஆதாரங்கள்
எனவே 18 வயது நிறைவடைந்து இது நாள் வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களும், வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி
18 வயது நிறைவடைய உள்ளவர்களும், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சோ்க்க பாஸ்போர்ட் அளவு வண்ணப்ப புகைப்படம், வயதுக்கான ஆதாரம், இருப்பிடத்திற்கான ஆதாரம் ஆகியவற்றை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் கொடுக்கலாம். மேலும் 17 வயது முடிவுற்றவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆதாரங்களை அளிக்கலாம்.
மேலும் வாக்காளர் பட்டியல்களை http://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். எனவே பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.