கலெக்டரின் காரை முற்றுகையிட்டவர்களால் பரபரப்பு

கலெக்டரின் காரை முற்றுகையிட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-21 17:38 GMT


ராமநாதபுரம் அருகே 7 ஆண்டுகளாக வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரால் பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டரின் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே பழைய சோதனை சாவடியை ஒட்டி அமைந்துள்ள மீனாட்சி நகர் 1-வது தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்கள் கலெக்டரின் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்து அவரின் காரின் முன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- நாங்கள் அனைவரும் மீனாட்சி நகர் 1-வது தெரு பகுதியில் குடியிருந்து வருகிறோம். எங்கள் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இந்த தண்ணீரை எடுக்காததால் ஆண்டு முழுவதும் தண்ணீர் சூழ்ந்த பகுதியில்தான் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். 7 ஆண்டுகளாக மழைநீர் சூழ்ந்துள்ளது. அதில்தான் இதுவரை வாழ்கிறோம். இந்த தண்ணீரை வெளியேற்றக்கோரியும் மழைநீர் தேங்காதவாறு வசதி செய்து கொடுக்க கோரியும் கடந்த 2018-ம் ஆண்டு முதல் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தண்ணீர் சூழ்ந்து பல ஆண்டுகளாகி விட்டதால் கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் தொற்று நோய்கள் பரவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வருகிறோம். வெளியில் சென்று வீடுதிரும்புவதற்குள் அபாய நிலையை தாண்டி வருவது போல் உள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்ல ஆம்புலன்சு வரமுடியவில்லை. நாங்கள் தூக்கி சென்றுதான் ஆம்புலன்சில் வைக்க வேண்டிய நிலை உள்ளது. அந்தஅளவிற்கு மிகக் கொடுமையான வாழ்வாதார நிலையில் உள்ளோம். எங்களுக்கு உடனடியாக அந்த பகுதியில் உள்ள மழை நீரை வெளியேற்ற வேண்டும். எங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்து தர வேண்டும். இவ்வாறு கூறினர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து கலெக்டரிடம் அழைத்து சென்று மனு அளிக்க செய்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்