வாணியம்பாடியில் ஆக்கிரமிப்பு அகற்ற அவகாசம் கேட்டு போராட்டம்

வாணியம்பாடியில் ஆக்கிரமிப்பு அகற்ற அவகாசம் கேட்டு ஆக்கிரமிப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-19 19:04 GMT

வாணியம்பாடியில் ஆக்கிரமிப்பு அகற்ற அவகாசம் கேட்டு ஆக்கிரமிப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட கோவிந்தாபுரம், நூருல்லாபேட்டை ஆகிய பகுதிகளில் ஏரி கால்வாய் புறம்போக்கு நிலங்களைஆக்கிரமிப்பு செய்து 65 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீடுகளை கட்டி 30 ஆண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின் காரணமாக மழைநீர் செல்ல முடியாமல் சாலைகள், அரசு மருத்துவமனை, பள்ளிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்களும், நோயாளிகளும், மாணவர்களும் அவதிப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ.க்கள் கோ.செந்தில்குமார், தேவராஜி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர உத்தரவிட்டனர்.

போராட்டம்

அதைத் தொடர்ந்து நீர்நிலை ஆக்கிரமிப்பு, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நேற்று காலை தாசில்தார் சம்பத் தலைமையில் வருவாய்த்துறையினர் நூருல்லாபேட்டை பகுதியில் உள்ள ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர்.

இதனை அறிந்த ஆக்கிரமிப்பாளர்கள் கால அவகாசம் கேட்டு திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், வீட்டுமனைகளை கொடுத்த பின்னர் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

மக்களின் போராட்டம் காரணமாக ஆக்கிரமிப்பு அகற்ற முடியாமல் வருவாய்த்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்