தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை தாசில்தார் அலுவகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் மாதர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-06-06 20:00 GMT

தஞ்சாவூர்:-

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை தாசில்தார் அலுவகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் மாதர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செல்போன் கோபுரம்

தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வனதுர்கா நகர், சரஸ்வதி நகர், புதிய நகர், லட்சுமி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் என 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஒரு தனிநபர் வீட்டு மாடி மேல் தனியார் நிறுவன செல்போன் கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதன் உயர் கதிர்வீச்சு காரணமாக பின்விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் செல்போன் கோபுரம் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை கண்டித்தும் சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். டவரை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து காத்திருப்பு போராட்டத்தை நடத்தின.

கலைந்து சென்றனர்

போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கருப்புசாமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் வனரோஜா ஆகியோர் தலைமை தாங்கினர். கிளை செயலாளர்கள் ராஜா, கோவிந்தராஜ், வெங்கடேஸ்வரி, மாதர் சங்க ஒன்றிய தலைவர் சரிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்