தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலூரில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
வேலூர் மாநகர தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ரூ.1,000 குறைவாக வாடகை கட்டணம் பெறும் தங்கும் விடுதிக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்கக்கோரி வேலூர் காந்தி ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் தேஜாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காந்திரோடு லாட்ஜ் உரிமையாளர் சங்க தலைவர் ராமன் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேலூர் மாவட்ட தலைவர் ஞானவேலு கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், வேலூர் மாநகரில் சி.எம்.சி. மருத்துவமனையை சுற்றி 100-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நோயாளிகள் இங்குள்ள தங்கும் விடுதியில் மாதக்கணக்கில் தங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு அறைக்கு ரூ.200 முதல் ரூ.600 வரை வாடகை வசூலித்து வருகிறோம். தற்போது ரூ.1,000-க்கும் குறைவாக ஒரு அறைக்கு வாடகை கட்டணம் பெறும் தங்கும் விடுதிகளுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. விதித்தால் அந்த தொகையை அவர்களிடம் கூடுதலாக வசூலிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால் வெளிமாநில நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய அரசு ரூ.1,000-க்கும் குறைவாக வாடகை வாங்கும் தங்கும் விடுதிகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.