பீடி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருேக பீடி தொழிலாளர் சங்கத்தினர் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகேந்திரன், பொருளாளர் காசி, உதவி பொதுச்செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளன தலைவர் எம்.பி.ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன், சி.ஐ.டி.யு. வேலூர் மாவட்ட செயலாளர் பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.ஆர்ப்பாட்டத்தில், ஓய்வுப்பெற்ற பீடி தொழிலாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
பீடி மீது விதித்துள்ள 28 சதவீத ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும். வீடுகள் இல்லாத பீடி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கி வீடு கட்டிக்கொடுக்க வேண்டும். பீடி தொழிலை நலிவடைய செய்யும் சட்டங்களை அமல்படுத்துவதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த பீடி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.