டாஸ்மாக் கடை முன்பு மது பாட்டில்களை உடைக்கும் போராட்டம்: புதிய தமிழகம் கட்சியினர் 38 பேர் கைது
டாஸ்மாக் கடை முன்பு மது பாட்டில்களை உடைக்கும் போராட்டம் நடத்த முயன்ற புதிய தமிழகம் கட்சியினர் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.;
தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக்கோரி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு பெண்கள் முன்னிலையில் மது பாட்டில்களை உடைக்கும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட தலைவர் அருண்குமார் தலைமையில், அக்கட்சியினர் நேற்று மதியம் ஊர்வலமாக வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி தலைமையிலான போலீசார் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மது பாட்டில்களை உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட வந்த 24 பெண்கள் உள்பட 38 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.