சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்தி திணிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்பைக் கண்டித்து திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.;
சென்னை,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அளித்துள்ள அறிக்கையில் மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஏய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழங்களான உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்றும், ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்தி வழி கல்வியே கற்பிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியில் மட்டும் தேர்வு நடத்தும் பரிந்துரையும் உள்ளது.
இதனை எதிர்த்து தி.மு.க. இளைஞர் அணி - மாணவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தலைமை ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.
இதுபோன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.