பணி நியமன தேர்வு நடத்த எதிர்ப்பு: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 4-வது நாளாக உண்ணாவிரதம்
பணி நியமன தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 4-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அண்ணாமலை, திருமாவளவன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த அரசாணை ரத்து செய்யப்படும் என்ற தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரியும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் கடந்த 9-ந் தேதியில் இருந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது.
4-வது நாளாக நேற்றும் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். இவர்களின் போராட்டத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நேற்று தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலையும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி 2 நாட்களுக்குள் சுமுக தீர்வை ஏற்படுத்த வேண்டும். அப்படியில்லை என்றால் அவர்களுடைய போராட்டத்தில் பா.ஜ.க. இணைந்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தை மேற்கொள்ளும் என்றார்.
அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் தொல்.திருமாவளவனும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களை நேரில் சந்தித்தார். அப்போது அவர்களிடம், உங்களது கோரிக்கை ஜனநாயகப்பூர்வமானது. இதை நிராகரிக்கமுடியாது. உங்கள் கோரிக்கைக்கு அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உங்களது கோரிக்கையை முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டுசெல்வது எங்கள் கடமை என்றார்.