குளித்தலை நகர புறவழிச்சாலையில் மரங்களை வெட்ட எதிர்ப்பு
குளித்தலை நகர புறவழிச்சாலையில் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.;
குளித்தலையில் அண்ணா நகர் பகுதியில் குளித்தலை நூலகம் முதல் ரெயில்வே கேட் வரை செல்லும் நகர புறவழிச்சாலையில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் தற்போது நடைபாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த புறவழிச்சாலையில் நடைபாதை அமைக்கும் இடத்தில் சாலையோரம் பல்வேறு மரங்கள் சமூக ஆர்வலர்கள் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வளர்க்கப்பட்டு தற்போது இந்த மரங்கள் நன்கு வளர்ந்த நிலையில் உள்ளது.
இந்தநிலையில் அந்த பகுதியில் நடைபாதை பணிகள் நடப்பதால் அங்குள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. மேலும் சில மரங்களில் குறியீடு இடப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று அந்த பகுதிக்கு சென்ற சமூக ஆர்வலர்கள் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்த நபர்கள் வெட்டப்பட்ட மரத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி பால் ஊற்றி மரங்களை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும் என தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
மேலும் மரங்களை வெட்டாமல் பணிகள் மேற்கொள்ள அதிகாரியிடம் மனு அளிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.