தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-03 21:00 GMT

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் (டாக்பியா) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களின் கோரிக்கைகள், சங்கங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் குழு கடன் அனைத்துக்கும் உரிய தொகையை வட்டி இழப்பின்றி அரசு வழங்க வேண்டும். தவணை தவறிய நகைக்கடன் மீது ஏல நடவடிக்கை செய்யப்பட்ட இழப்பு தொகையை எவ்வித நிபந்தனையுமின்றி சங்கத்தின் நஷ்ட கணக்கிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு டாக்பியா ஓய்வு பெற்றோர் சங்க மாநில செய்தி தொடர்பாளர் ஆசிரியத்தேவன் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் அருணகிரி, மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட துணைத்தலைவர்கள் சரவணன், பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்