திண்டுக்கல், பழனியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல், பழனியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொருளாளர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் தலைமை நிலைய செயலாளர்கள் சைமன், லோகநாதன், மாவட்ட அமைப்பு செயலாளர் மகேஸ்வரன், துணை செயலாளர் ரமேஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
மேலும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பட்டப்படிப்பு ஊக்கத்தொகை மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதேபோல் பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் பிரேம்குமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், குஜிலியம்பாறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.