பேரூராட்சிகளில், அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்-கட்சியினர் திரளாக பங்கேற்பு

Update: 2022-12-09 18:45 GMT

தர்மபுரி:

மின் கட்டண உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் பால் விலை ஏற்றம் ஆகியவற்றை கண்டித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும் மற்றும் சட்டம், ஒழுங்கை காக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாலக்கோடு பேரூராட்சி அலுவலகம் எதிரில் அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது என்று கூறினார்.

இதில் அவைத் தலைவர் தொ.மு.நாகராசன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கீல் செந்தில், மாரண்டஅள்ளி நகர செயலாளர் கோவிந்தன், தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாதப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், மாவட்ட கவுன்சிலர் சரவணன், அண்ணாமலை மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

பென்னாகரம்

பென்னாகரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வேலுமணி, அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன் கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆறுமுகம், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ரவி, கலைவாணன், மாவட்ட கவுன்சிலர் குட்டி, மாவட்ட பிரதிநிதி மாதவசிங், பேரூராட்சி கவுன்சிலர்கள் பீமன், ராதிகாபாய், தகவல் தொழில் நுட்ப நகர செயலாளர் பாரி வள்ளல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், மதிவாணன், சேகர் முருகன், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, நகர செயலாளர் தென்னரசு, ராஜா, சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் பிரிவு மாநில துணை செயலாளர் அசோக்குமார், கடத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா, பொது குழு உறுப்பினர் துரை, மாவட்ட சார்பு அமைப்பு நிர்வாகிகள் பெரியகண்ணு, உலகமாதேஷ், வஜ்ரவேல், இடும்பன், மோமினிக், மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கடத்தூர், பொ.மல்லாபுரத்திலும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாரண்டஅள்ளி

மாரண்ட‌அள்ளி பேரூராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே‌.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மாதப்பன், நாகராசன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், கவிதா சரவணன், வக்கீல் செந்தில், சாமனூர் கிளை செயலாளர் சிவம், முன்னாள் கவுன்சிலர் கண்ணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பேரூர் செயலாளர் கோவிந்தன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்