திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தள்ளுவண்டி வியாபாரிகள் திடீர் போராட்டம்
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தள்ளுவண்டி வியாபாரிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தள்ளுவண்டிகள், நடைபாதை கடைகள் அமைத்து பழம், பூக்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்தநிலையில் கரூர் பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியில் ஒரு ஓட்டல் அருகே இருந்த தள்ளுவண்டி கடைகளை இன்று மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். ஓட்டலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி அதிகாரிகள் கடைகளை அகற்றியதாக வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.
இந்தநிலையில் ஓட்டல் முன்பு தள்ளுவண்டிகளை நிறுத்தி வியாபாரிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே பா.ஜனதா கட்சியின் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக் வினோத், நகர தலைவர் செந்தில் உள்ளிட்டோர் அங்கு வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஓட்டலுக்கு பாதைவிட்டு தள்ளுவண்டி, நடைபாதை கடைகளை அமைக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் பஸ்நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.