நாகை தாசில்தார் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை போராட்டம்
பயிர் காப்பீட்டு நிறுவனங்களை அரசு ஏற்று நடத்த வேண்டும். தனியார் காப்பீட்டு நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். நெல் அறுவடையின்போது பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
2022-23-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டை அரசு நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை தாசில்தார் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராஜா, வடிவேல், ஸ்டாலின் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகையன் கலந்து கொண்டு பேசினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமார், ஜீவாராமன், மார்க்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போலீசாருடன் தள்ளு முள்ளு
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது அலுவலக நுழைவாயிலில் இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டக்காரர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.