பணி நேர அதிகரிப்பை கண்டித்து அரசு டாக்டர்கள் தர்ணா
பணி நேர அதிகரிப்பை கண்டித்து ராமநாதபுரத்தில் அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்,
பணி நேர அதிகரிப்பை கண்டித்து ராமநாதபுரத்தில் அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாணை
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான பணி நேரம் இதுவரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என இருந்ததை தற்போது காலை 8 மணி முதல் என நீட்டித்து அரசாணை பிறப் பிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு பணிகளுக்கு மத்தியில் பணிபுரியும் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களின் பணி நேரத்தை அதிகரிப்பது கடும் மனஉளைச்சலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. ஊதியகுழு அரசு ஊழியர்களுக்கு சராசரியாக வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை என்பதையே பரிந்துரைத்து உள்ளது.
கோரிக்கை
எனவே, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பணி நேரத்தை அதிகரிக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் டாக்டர் மலையரசு தலைமை வகித்தார். செயலாளர்கள் டாக்டர் முத்தரசன், டாக்டர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருபாகரன் வரவேற்று பேசினார்.
தர்ணா
இதில், துணை தலைவர் டாக்டர் மனோஜ் குமார், இணை செயலாளர்கள் டாக்டர் அறிவழகன், டாக்டர் ரமணீஸ்வரி உள்பட டாக்டர்கள் பங்கேற்றனர். தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட வர்கள் அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அதுவரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.