தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மீது ஊராட்சி செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தூண்டுகோலாக இருந்து வரும் ஊரக வளர்ச்சிப் பிரிவு அதிகாரிகள் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டி தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் கோரிக்கைகள் தொடர்பான மனுவை அவர்கள் கொடுத்தனர்.