தர்மபுரி மாவட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பாலஸ்தீனத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மணி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராஜ், மாவட்ட செயலாளர் ஜீவா, விவசாய தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் பிரதாபன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை செயலாளர் சுதர்சனன், ஏ.ஐ.சி.சி.டி.யு. மாநில பொறுப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், ஐக்கிய நாடு சபை இஸ்ரேலை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். பாலஸ்தீனத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலால் அப்பாவி மக்கள் பலியாவதை தடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.