தமிழ்நாடு கள் இயக்கம் மற்றும் விவசாய முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தென்னை மற்றும் பனை மரங்களில் கள் இறக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தியும், கர்நாடகா அரசு, காவிரியில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை தாங்கினார். விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். நிறுவன தலைவர் செல்ல.ராசாமணி தொடங்கி வைத்து பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தென்னை, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், தென்னை, பனை மரங்களில் கள் இறக்குவதற்கு, தமிழக முதல்-அமைச்சர் அனுமதி அளிக்க வேண்டும். வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், விவசாய முன்னேற்ற கழகத்தினர், கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.