சொத்து தகராறில் தாயை வெட்டிக்கொன்ற மகன் போலீஸ் நிலையத்தில் சரண்

சொத்து தகராறில் பெற்ற தாயை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த மகன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

Update: 2022-11-21 07:35 GMT

தாய் வெட்டிக்கொலை

ெசன்னை மதுரவாயல் சேக் மானியம், தர்மராஜா கோவில், 7-வது தெருவைச் சேர்ந்தவர் சரோஜா (வயது 80). இவருடைய மகன் கபாலி (55). இவர், அதே பகுதியில் 4-வது தெருவில் வசித்து வந்தார்.

நேற்று காலை தனது தாயார் சரோஜா வீ்ட்டுக்கு சென்ற கபாலி, தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தாய்-மகன் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த கபாலி, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து பெற்றத்தாய் என்றும் பாராமல் சரோஜாவின் கழுத்தில் வெட்டினார்.

இதில் படுகாயம் அடைந்த சரோஜா, ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். சரோஜாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்த போது அவர், கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சரண் அடைந்தார்

பின்னர் கபாலி, மதுரவாயல் போலீஸ் நிலையம் சென்று நடந்த விவரங்களை கூறி போலீசில் சரண் அடைந்தார்.உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் சிவானந்த் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையான சரோஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி கபாலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

சொத்து தகராறில்...

சரோஜாவுக்கு கபாலி என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கபாலிக்கு 2 மனைவிகள். துபாயில் வேலை செய்து வந்த கபாலி, சொந்த ஊர் வந்தவர் அதன்பிறகு இங்கேயே தங்கி விட்டார். தற்போது வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.இதற்கிடையில் சரோஜா, தனது சொத்துக்களை மகன், மகள்கள் அனைவருக்கும் சரி பங்காக பிரித்து கொடுத்து விட்டதாக தெரிகிறது. ஆனால் கபாலி, சரோஜா தற்போது குடியிருக்கும் வீட்டையும் தனது பெயருக்கு மாற்றி தரும்படி கேட்டு அடிக்கடி தாயாருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்றும் வழக்கம்போல் தாய் வீட்டுக்கு சென்ற கபாலி, அந்த வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி கேட்டார். அதற்கு சரோஜா மறுத்துவிட்டதால், ஆத்திரத்தில் பெற்ற தாயை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. கபாலியை ேபாலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்