மதவெறுப்பு பிரசாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும்
மதவெறுப்பு பிரசாரத்தை பிரதமர் மோடி தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் கூறினார்.;
மதவெறுப்பு பிரசாரத்தை பிரதமர் மோடி தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் ஆம்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தடுத்து நிறுத்த வேண்டும்
உலக நாடுகளில் ராணுவத்திற்கு அதிகமாக செலவு செய்யும் 3-வது நாடாக இந்தியா திகழ்கிறது. ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறப்பிடம் பிடித்துள்ளது. மத வெறுப்பு பிரசாரம் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டியது மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியின் கடமையாகும். மத வெறுப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருபவர்களை சுப்ரீம் கோர்ட்டும் கண்டித்துள்ளது.
புலம் பெயர்ந்த இந்தியர்களின் நலனுக்காகவும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கவும், மத்திய அரசு தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். தற்போது பாரதிய ஜனதா கட்சி 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறது. ஆனால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கியுள்ளது.
வேடிக்கையாக உள்ளது
காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். யாத்திரையின் வெற்றி மற்றும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பா.ஜ.க. தோல்வியடைவது உறுதி.
கடந்த ஆட்சியின்போது தமிழகத்தில் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழக முன்னாள் கவர்னர் பன்வாரிவால் புரோஹித் கூறியுள்ளார். ஆனால் வேந்தர்களை நியமனம் செய்வது கவர்னரின் கையில் தான் உள்ளது. அவ்வாறு இருக்க அரசாங்கத்தின் மீது அவர் குற்றம் சாட்டியுள்ளது வேடிக்கையாக உள்ளது.
2 தொகுதிகள் கேட்போம்
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியுடன் போட்டியிடுவோம். தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவோம். தமிழகத்தில் 2 தொகுதிகளை கேட்டு பெறுவோம். வேலூர் தொகுதியை கேட்டு பெறுவது குறித்து தேர்தலின்போது முடிவு செய்யப்படும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா சென்னை ராஜாஜி அரங்கில் நடைபெற உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்சியின் தேசிய செயலாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் பாசித், மாநில துணைத் தலைவர் இப்ராஹிம், மாவட்ட தலைவர் எஸ்.டி.நிசார் அஹமத் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.