ரூ.1¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் ரூ.1¾ கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.;
கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் ரூ.1¾ கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 74 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் ரூ.1 கோடி மதிப்பிலான 5 வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கங்கலேரி ஊராட்சி ஏரிகொல்லை வட்டத்தில் ரூ.1.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நீர் உறிஞ்சி குழி கட்டுமான பணியை அவர் பார்வையிட்டார். மா செடிகளுக்கு தண்ணீர் தேங்கும் வகையில் மா மரத்தை சுற்றி மண் அமைத்தல் மற்றும் வரப்பு கட்டும் பணிகள் நடைபெறுவதையும் கலெக்டர் பார்வையிட்டார்.
அங்கன்வாடி கட்டிடம்
காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி சமத்துவபுரத்தில் ரூ.20.44 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம், சமுதாய கூடம், நுழைவு வாயில், பொதுவினியோக கடை ஆகியவற்றை புனரமைப்பு பணிகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து தார்சாலை புதுப்பிக்கும் பணி, சமத்துவபுரத்தில் 100 குடியிருப்புகளை புனரமைக்கும் பணிகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
இந்த பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, உதவி செயற்பொறியாளர் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேடியப்பன், சாந்தி, பொறியாளர் சாஸ்தா, பணி மேற்பார்வையாளர் நாகூர்மீரான், கல்பனா, ஊராட்சி மன்ற தலைவர்கள் காயத்ரி, லட்சுமணன், மஞ்சுளா மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
வேப்பனப்பள்ளி ஒன்றியம்
வேப்பனப்பள்ளி ஒன்றியம் பொம்மரசனப்பள்ளி, அரியனப்பள்ளி, நாச்சிகுப்பம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் நீர்வடிப்பகுதி திட்டத்தின் மூலம் மழைநீர் சேமிப்பு கசிவு நீர் குட்டைகள், கதிர்அடிக்கும் களம் மற்றும் பைப்லைனுடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.