மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும்
தமிழகத்தில் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
குறைதீர்வு கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தனஞ்செயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீடு, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 354 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மது விலக்கு
கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் சுமதி கபிலன் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், தமிழகத்தில் மதுவிற்பனையை அரசே நடத்தி வருகிறது. மதுவின் மூலம் பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதும், பல்வேறு சமூக சீரழிவுகளும் ஏற்படுகிறது. மதுஅருந்தும் கணவரால் பெண்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் சாலை விபத்துகள் ஏற்படுகிறது. நகரின் முக்கிய இடங்களில் டாஸ்மாக் கடைகள் உள்ளதால் அதன் அருகே குடித்துவிட்டு தகராறும் செய்யும் நபர்களால் பள்ளி, கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். டாஸ்மாக் கடைகளினால் ஏற்படும் சீரழிவுகளுக்கு அரசு பொறுப்பேற்று தமிழகத்தில் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.
வேலூரை அடுத்த கருகம்புத்தூரை சேர்ந்த பெண் அளித்த மனுவில், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த எனது மகளை அதே கல்லூரியில் படிக்கும் முள்ளிப்பாளையத்தை சேர்ந்த மாணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடத்தி சென்று விட்டார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தேன். இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் 18 வயது நிரம்பி விட்டதால் பெண் அவருடைய விருப்பத்தின்படி செல்லலாம் என்று கூறினர். தற்போது மாணவரின் உறவினர் ஒருவர் ரூ.10 லட்சம் கொடுத்தால் மகளை வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறுகிறார். எனது மகளை இதுவரை அவர்கள் என்னிடம் காண்பிக்கவில்லை. எனது மகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
ஏரியூரை சேர்ந்த வேண்டாமணி அளித்த மனுவில், எனக்கு கடந்த 2015-ம் ஆண்டு குமரன் என்பவருடன் திருமணம் நடந்தது. 7 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது கணவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மயங்கி விழுந்த பெண்
காட்பாடி செங்குட்டையை சேர்ந்த பாரதி என்ற பெண் நிலப்பிரச்சினை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த அரசு அதிகாரிகள், போலீசார் உடனடியாக அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தினர். பின்னர் 108 ஆம்புலன்சு மூலம் அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 16 பேருக்கு ரூ.8,22,300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற ஓவியம், பேச்சு, வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுதொகை, சான்றிதழ் மற்றும் மாவட்டத்தில் அதிகளவு மரக்கன்றுகள் நட்ட 3 பேருக்கு பசுமை முதன்மையாளர் விருது பாராட்டு சான்றிதழ், ரூ.1 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சீதா, மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் வசந்த ராம்குமார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சஞ்சித் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.