போலீஸ்காரர் வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை

போலீஸ்காரர் வழக்கில் சமஸ்கிருத வார்த்தைகளை சுட்டிக்காட்டி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். மேல்முறையீட்டு மனுவில் அந்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

Update: 2022-10-06 20:41 GMT

போலீஸ்காரர் வழக்கில் சமஸ்கிருத வார்த்தைகளை சுட்டிக்காட்டி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். மேல்முறையீட்டு மனுவில் அந்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

கர்மாவை சுட்டிக்காட்டிய நீதிபதி

மதுரையைச் சேர்ந்த ஸ்ரீமுருகன், மதுரை மாநகர போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சில புகாரின்பேரில் அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடந்த சில மாதங்களில் 3 போலீஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவரை மதுரையில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்து போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், தன்னை மதுரை மாநகர போக்குவரத்துப்பிரிவுக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தனிநீதிபதி, கர்மா, சஞ்சித கர்மா, பிரார்ப்த கர்மா உள்ளிட்ட சில சமஸ்கிருத வார்த்தைகளையும், அதற்கான அர்த்தங்களையும் சுட்டிக்காட்டி அவரது இடமாற்ற உத்தரவை ரத்து செய்தார். மேலும் அவரை மதுரை மாநகர போக்குவரத்து போலீஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யும்படியும் உத்தரவில் கூறி இருந்தார்.

இந்த தனிநீதிபதி உத்தரவுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் போலீஸ் உயர் அதிகாரிகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இடைக்காலத்தடை

இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், மகேஷ்பாபு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, மனுதாரரை இடமாற்றம் செய்தது துறை ரீதியான நடவடிக்கை. அதில் கர்மா அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவு வழங்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு பணியில் இருப்பவரை குறிப்பிட்ட இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட முடியாது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும், என வாதாடினார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், போலீஸ்காரருக்கான பணி மாற்றம் குறித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்