எருது விடும் விழாவிற்கு தடை
சூளகிரி அருகே உாிய அனுமதி பெறாததால் எருது விடும் விழாவிற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சூளகிரி
சூளகிரி அருகே உாிய அனுமதி பெறாததால் எருது விடும் விழாவிற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ெபாதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
எருது விடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. இதனிடையே சூளகிரி அருகே பேடப்பள்ளி கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி எருது விடும் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி அந்த பகுதியில் உள்ள மைதானத்தை சீரமைத்து, தடுப்புகள் மற்றும் மேடை அமைக்கும் பணியில் விழாக்குழுவினர் ஈடுபட்டனர். ஆனால் பேடப்பள்ளியில் எருது விடும் விழாவை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.
தடுத்து நிறுத்தம்
இதையடுத்து நேற்று முன்தினம் எருது விடும் விழா நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கு சென்று எருது விடும் விழாவை தடுத்து நிறுத்தினர்.
இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், விழாக்குழுவினர், கிராம மக்கள், வீரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.