விளைபொருட்கள் மழையில் நனைந்து நாசம்; ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சாலை மறியல்

கொள்முதல் செய்யாமல் கிடப்பில் போட்டதால் விளைபொருட்கள் மழையில் நனைந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-05-26 17:48 GMT

சாலை மறியல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு அரியலூர் பெரம்பலூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த எள், கடலை, உளுந்து மற்றும் கொப்பரை தேங்காய் உள்ளிட்டவைகளை விற்பனை செய்ய நேற்று முன்தினம் இரவு கொண்டு வந்தனர். இந்த நிலையில், விளைபொருட்களை கொள்முதல் செய்யாமல் கிடப்பில் போட்டதால் திடீரென வந்த மழையில் விவசாய பொருட்கள் நனைந்து நாசமாயின. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்திய ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை கண்டித்து திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மழையில் நனைந்தபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்கனவே கொள்முதல் செய்த பொருட்களுக்கு உண்டான தொகையையும், விவசாயிகளுக்கு தராமல் காலதாமதம் செய்ததாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் ஜெகநாத், முத்துக்குமார், பெரியசாமி உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் தீர்வு காணப்படும் வரை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் ஒருங்கிணைந்த பெரம்பலூர் அலுவலகத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விவசாயிகளிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருச்சி-சிதம்பரம் சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்