விநாயகர் சதுர்த்தியையொட்டி நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகள் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

விநாயகர் சதுர்த்தியையொட்டி நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-08 11:30 GMT

விநாயகர் சதுர்த்தி விழா

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய நல்லாட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதீர்த்த குளம் மற்றும் பொன்னேரி கரை போன்ற இடங்களில் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குங்கள்.

களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலீஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம்.

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில்

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்-பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம்-எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுகுகந்த நீர் சார்ந்த-மக்க கூடிய-நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை மேலும் விவரங்களுக்கு அணுகலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்