தன்னார்வலர்களுக்கு பரிசு, சான்றிதழ்

தன்னார்வலர்களுக்கு பரிசு, சான்றிதழ் கலெக்டர் வழங்கினார்.

Update: 2022-12-05 19:29 GMT

குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் தன்னார்வலர்களுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

பரிசு, சான்றிதழ்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சர்வதேச தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு, தன்னார்வ தொண்டு மூலம் ஒற்றுமை என்ற தலைப்பின் கீழ் தன்னார்வலர்களை ஊக்குவித்து கவுரவப்படுத்தும் விழா நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் குழந்தைகளின் நலன், உரிமைகளை பாதுகாக்க, குழந்தைகளின் உரிமை மீறலுக்கு குரல் கொடுக்க, வலிமையான சமுதாயத்தை உருவாக்க, தொடர்ந்து குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகளின் பாதுகாப்பிற்காக மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனத்திற்கு அதன் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் ஆனந்த்திற்கு நினைவுப் பரிசு, பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.சைல்டு லைன் 1098 மாவட்ட ஒருங்கிணைப்பாளர், குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் உதவி பொதுமேலாளர் ஆகியோர், தன்னார்வ தினத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.

மாணவ- மாணவிகள்

அதேபோன்று சதீஷ்குமார், மேகலா, பர்சானா சுரேஷ் மற்றும் ஆர்த்திகாவிற்கும் கேடயமும், மாவட்ட சமுக நல அலுவலர் இந்திரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கண்ணன் ராதா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்த் மற்றும் பல்வேறு துறை சார்ந்த பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னர் தன்னார்வலர் தின வாழ்த்து மடல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு சைல்டு லைன் 1098 மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, ஓவிய போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த வன்னிவேடு மோட்டூர் மற்றும் சுமைதாங்கி அரசினர் உயர்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 15 மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் முரளி, துணை கலெக்டர் தாரகேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், முன்னோடி வங்கி மேலாளர் ஆலியமா ஆபிரஹாம் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்