தனியார் நிறுவன காவலாளி அடித்துக்கொலை
தூத்துக்குடியில் தனியார் நிறுவன காவலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.;
தூத்துக்குடியில் தனியார் நிறுவன காவலாளி இரும்புக்கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
பிணமாக கிடந்த காவலாளி
தூத்துக்குடி போல்பேட்டை கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஞானராஜ் (வயது 53). இவர் தூத்துக்குடி இந்திய உணவுக்கழக குடோன் அருகே உள்ள தனியார் நிறுவன லாரி செட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவில் பணியில் இருந்தார்.
நேற்று காலையில் லாரி செட்டில் வேலை செய்ய மற்ற ஊழியர்கள் வந்தனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே ஞானராஜ் காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தூத்துக்குடி தென்பாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
அதன்பேரில், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சம்பத், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
ஞானராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
மேற்பார்வையாளர்
அதாவது, ஞானராஜ் வேலை பார்த்த அதே லாரி செட்டில் தூத்துக்குடி லயன்ஸ்டவுன் பகுதியைச் சேர்ந்த மைக்கேல் ஜெயக்குமார் (52) என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுகுடித்து விட்டு தகராறு செய்ததால், பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு ஞானராஜ் வழக்கம் போல் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த மைக்கேல் ஜெயக்குமார் லாரி செட்டின் உள்ளே தனது உடைகள் இருப்பதாகவும், அதனை எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். ஆனால் ஞானராஜ், அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார். தொடர்ந்து, ஞானராஜ், லாரி செட் உரிமையாளரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அப்போது, மைக்கேல் ஜெயக்குமார் உடைகளை எடுத்து செல்ல லாரி செட் உரிமையாளர் அனுமதி வழங்கினார்.
அடித்துக் கொலை
இதனை தொடர்ந்து மைக்கேல் ஜெயக்குமார் லாரி செட்டிற்குள் சென்று தனது உடைகளை எடுத்தார். அப்போது, மைக்கேல் ஜெயக்குமாருக்கும், ஞானராஜிக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மைக்கேல் ஜெயக்குமார், அங்கு கிடந்த இரும்பு கம்பியால் ஞானராஜை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ஞானராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மைக்கேல் ஜெயக்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைது
இந்த கொலை சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிந்து தப்பிச் சென்ற மைக்கேல் ஜெயக்குமாரை பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
----------