எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான கார் அடிக்கடி பழுது... இழப்பீடு கோரிய வழக்கில் தனியார் நிறுவனம் பதில் அளிக்க உத்தரவு...!

எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான கார் அடிக்கடி பழுதானதால் இழப்பீடு கேட்ட வழக்கில் தனியார் கார் நிறுவனம் பதில் அளிக்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-12-24 12:03 GMT

மதுரை,

சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன், மதுரை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை கப்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2020-ம் ஆண்டு இன்சூரன்ஸ் தொகை உள்பட ரூ.23.39 லட்சம் செலுத்தி கார் வாங்கினேன். ஓராண்டுக்கு முழுமையான வாரண்டி இருப்பதாக கூறினர். மேலும் 5 ஆண்டிற்கு 2 லட்சம் கிலோமீட்டர் வரை முறையான பராமரிப்பிற்காக ரூ.42 ஆயிரத்து 126 வசூலித்தனர். இதனால், காரை அவ்வப்போது பராமரித்து கொடுப்பது அந்த நிறுவனத்தின் பணியாகும்.

ஆனால் அந்த கார் என்ஜினில் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் முதல் முறை சரி செய்து கொடுத்தனர். ஆனாலும் அந்த காரில் பழுது தொடர்ந்தது. 2 லட்சம் கிலோமீட்டர் வரை பராமரிக்க நிறுவனத்தினர் உறுதியளித்திருந்தனர் அதன்படி அவர்கள் செயல்படவில்லை.

1,18,374 கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே பயன்படுத்திய நிலையில் என்ஜின் பழுது தொடர்ந்தது. இதற்காக ரூ.1.10 லட்சம் பெற்றுக் கொண்டனர்.

பழுதை சரி செய்து ஊருக்கு சென்ற போதும் கார் மீண்டும் பழுதானது. இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இரண்டு லட்சம் கிலோமீட்டர் வரை எஞ்சின் கழுதை சரிபார்த்து தருவோம் என உறுதி அளித்துவிட்டு தற்போது பழுது பார்ப்பதற்கும் கூடுதலாக தொகை பெற்றுக் கொண்டதால், எனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி பாரி, உறுப்பினர்கள் விமலா, வேலுமணி ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் வக்கீல் கே.ஆர்.பாரதி கண்ணன் ஆஜராகி, மனுதாரர் எம்.எல்.ஏ. ஆக இருந்தும் அலைக்கழிக்கப்பட்டு உள்ளார். தற்போது வரை கார் முறையாக இயங்க வில்லை.

எனவே, அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். இதையடுத்து மனுவிற்கு தனியார் கார் நிறுவனத்தின் பொது மேலாளர் தரப்பில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி மாதம் 20-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்